×

11 மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையிலேயே நிற்கிறது போடியில் ரயில்வே மேம்பால பணிகள் தேக்கம்

*போக்குவரத்து தொடர் பாதிப்பு * விரைந்து முடிக்க கோரிக்கை

போடி : கொச்சின் – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், போடி ரயில்வே கிராஸிங்கில் அமைக்கப்படும் மேம்பால பணிகள் தொடங்கி 11 மாதங்கள் ஆன நிலையில், அடுத்தகட்டத்தை நோக்கி நகராமல் நிற்கிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

போடி நகரின் சுப்புராஜ் நகரிலிருந்து தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, செக்கானூரணி வழியாக மதுரை வரை குறுகிய ரயில் பாதையில் 84 ஆண்டுகளாக ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1913ம் ஆண்டு துவங்கிய இந்த 90 கி.மீட்டர் தூரமுள்ள ரயில் பாதை கட்டுமான பணிகள், தற்போது இருப்பது போன்ற கனரக இயந்திரங்கள் எதுவும் இன்றி, தொழிலாளர்கள் உழைப்பின் வாயிலாக 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இதன்படி 1926ம் ஆண்டு போடியில் இருந்து மதுரைக்கு ரயில் சேவை துவங்கியது.

முதற்கட்டமாக ஏலக்காய், காபி, தேயிலை, நறுமண பொருட்கள், இலவம், மா, எலுமிச்சை என பொருட்களை சுமந்து செல்லும் சரக்கு ரயில் சேவையாக துவக்கப்பட்டது. இந்த பொருட்கள் அனைத்தும் மதுரையிலிருந்து சென்னை சென்று, பின் அங்கிருந்து கப்பல்களில் இங்கிலாந்து நாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டன. பின்னர் போடி – மதுரை இடையே சரக்கு ரயில் சேவையுடன், பயணிகள் ரயில் சேவையும் தொடங்கியது. இந்த ரயில்கள் நிலக்கரி இன்ஜின் உதவியுடன் இயக்கப்பட்டன. மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய இந்த ரயில் சேவையை, அகலப்பாதையாக மாற்றம் செய்து அதிக எண்ணிக்கையில் ரயில்கள் இயக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மதுரை – போடி வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இங்கு அகல ரயில்பாதை அமைக்க முடிவு செய்த ஒன்றிய அரசு, மாநில அரசிடம் 25% நிதி ஒதுக்க வேண்டும் என கோரியது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதனை ஏற்க மறுத்தார். இதனால் மீட்டர் கேஜ் பாதையில் இருந்த தண்டவாளங்கள் அகற்றப்பட்ட நிலையில், அடுத்தகட்ட பணிகள் ஏதும் தொடங்காமல் நின்றது. பின்னர் 7 ஆண்டுகளுக்கு பின் ரூ.170 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கி மிக மெதுவாக நடைபெற்றது. முதற்கட்டமாக மதுரையிலிருந்து தேனி வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 11 ஆண்டுகள் வரை நீடித்தது. பின் இப்பாதையில் ரயில் சேவை தொடங்கியது.

அடுத்ததாக,, தேனியிலிருந்து போடி சுப்புராஜ் நகர் ரயில்வே ஸ்டேஷன் வரையிலான 16 கி.மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ரூ.390 கோடி மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் போடியிலிருந்து மதுரை வழியாக சென்னை வரை அதிவேக ரயில் சேவை தொடங்கியது. இதற்கிடையே, கேரள மாநிலத்தின் கொச்சி நகரம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

போடியில் ரெட்டை வாய்க்கால் பகுதியில் இந்த நான்கு வழிச்சாலையின் குறுக்கே ரயில்வே கிராஸிங் அமைந்துள்ளது. இதனால் ரயில்கள் கடக்கும்போது இங்குள்ள கேட் மூடப்படுகிறது.
தமிழக, கேரள அரசுகளின் பஸ்கள், தனியார் பஸ்கள், கண்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள், விவசாய வாகனங்கள், தொழிலாளர்கள் செல்லும் ஜீப், வேன் உள்ளிட்டடவை இந்த சாலையில் அதிகம் செல்கின்றன. இதனால் ரயில்வே கேட் மூடப்படும் போது வாகனங்கள் நீண்ட வரிசையில் தேங்குகின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில், இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, போடி முந்தல் சாலை ரெட்டை வாய்க்கால் பகுதியில் 800 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் அமைக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, ஒன்றிய அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கி மேம்பால பணிகளை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. இந்த மேம்பாலம் 1.80 மீட்டர் அகலம் கொண்டதாக, 23 தூண்கள் தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலச்சாலை 13 மீட்டர் அகலம் மற்றும் 800 மீட்டர் நீளத்தில் அமைகிறது. மேம்பால பணிகளுக்கான தூண்கள் அமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கின. இதன்படி பள்ளம் தோண்டப்பட்டு இரும்பு கம்பிகள் கட்டி 2 தூண்களுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் நடந்து 11 மாதங்கள் கடந்தும் முன்னேறிச்செல்லாமல் அப்படியே நிற்கிறது.

இந்த மேம்பால பணிகள் துவங்கியபோது, 2023 டிசம்பரில் நிறைவடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால், இரண்டு தூண்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டதுடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை பார்க்கும்போது, பாலம் முடிவுக்கு வரும் காலம் குறித்த கேள்வி அனைவருக்கும் எழுகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட ரயில்வே சாலை, 6 மீட்டர் அளவில் இருந்து ஆறரை மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில் மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பீடு அதிகரிக்கும் என்பதால், பாலம் கட்டுமான பணிகளின் ஒப்பந்ததாரர் அடுத்தகட்ட பணிகளை தொடராமல் நிறுத்தியுள்ளார் என தெரிகிறது. இருப்பினும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post 11 மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையிலேயே நிற்கிறது போடியில் ரயில்வே மேம்பால பணிகள் தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Cochin ,Dhanushkodi National Highway ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...